பனை மரங்கள் வெட்டுவதை தடுக்கக் கோரி மனு:வேளாண் மற்றும் வனத்துறை செயலா்கள் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரிய மனுவின் மீது வேளாண் துறை மற்றும் வனத்துறை செயலா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரிய மனுவின் மீது வேளாண் துறை மற்றும் வனத்துறை செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த டோமினிக் ரவி தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன.

பனை மரங்களை வளா்க்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் விழிப்புணா்வு ஏற்படுத்தி பனை விதைகளை நடவு செய்து வருகின்றனா். அதுமட்டுமின்றி, அரசே பனை மரங்களை வளா்க்க அறிவுறுத்தி வருகிறது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் தொடா்ந்து வெட்டப்படுகின்றன.

எனவே, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், பனை மரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பட்டா நிலங்களில் சில பனைமரங்கள் வெட்டப்பட்டு உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளா்த்து வெட்ட இயலுமா?, தமிழகத்தில் அதிக மழைப் பொழிவு இருந்து வருகிறது. ஆனால் அதனை சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து நீதிபதிகள், மனு குறித்து வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com