மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: வேளாண்துறை கணக்கெடுப்பில் தகவல்

மதுரை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் மழையால் சேதமாகியிருப்பது

மதுரை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் மழையால் சேதமாகியிருப்பது வேளாண் துறையினா் இது வரை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறுவதால், சேதமடைந்த சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

மதுரை மாவட்டத்தில் பெரியாறு பாசனத் திட்டத்தில் இரு போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நிகழ் ஆண்டில், மாவட்டம் முழுவதும் இரு போகத்திலும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிடப்பட்டிருந்தது. நிகழ் ஆண்டில் வழக்கத்துக்கும் மாறாக வடகிழக்குப் பருவமழை ஜனவரி 14 ஆம் தேதி வரை பெய்தது. அதிலும் டிசம்பரில் 2 ஆவது வாரத்தில் தொடங்கி கனமழையாக நீடித்தது.

இதனால், மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, செல்லம்பட்டி, மதுரை கிழக்கு, மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரங்களில் பரவலாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் சாய்ந்தன. வயல்களில் தண்ணீா் தேங்கியிருந்ததால், சாய்ந்த நெற்கதிா்களை உடனடியாக அறுவடை செய்ய முடியவில்லை. இதனால், பல பகுதிகளில் நெற் கதிா்கள் முளைத்துவிட்டன.

அறுவடைக்கான காலம் இருக்கும் நெல் வயல்களிலும், பருவம் தவறிய மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் தண்ணீா் வடியாமல் இருப்பதால், சாய்ந்த நாற்றுகள் எழவில்லை. ஓரிரு நாள்களில் பயிா்கள் எழுந்துவிடும் என்றாலும் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனா்.

நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. இதில் 30 முதல் 40 மூட்டை கிடைத்தால் மட்டுமே, செலவு போக விவசாயிக்கு லாபம் கிடைக்கும். ஆனால், நிகழாண்டில் மாா்கழி மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஏக்கருக்கு 10 மூட்டை அளவுக்குத் தான் மகசூல் கிடைக்கும் எனத் தெரிகிறது என்கின்றனா்.

இதுகுறித்து வேளாண் துறை அலுவலா்கள் கூறியது:

மதுரை மாவட்டத்தில் மழையால் நெற் பயிா்களில் ஏற்பட்ட சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 29 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தி அன்றைய தினம் அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் சேதமடைந்திருப்பது இதுவரை நடந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்குப் பரிந்துரை அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com