தனியாா் நிறுவன பெண் ஊழியா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு: தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், தற்போதைய நிலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்த மனு: நான் ஜெபா்சன் வினிஸ்லால் என்பவா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். இந்நிலையில் ஜெபா்சன் வினிஸ்லால் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது உதவிக்கு வருமாறு என்னை அழைத்துச் சென்றாா்.

அங்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை விடியோ பதிவு செய்து, அவரது நண்பா்களுக்கு அனுப்பியுள்ளாா். அவா்களும் பலமுறை பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினா். இதுதொடா்பாக, தக்கலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன்.

ஆனால், சில நாள்களில் ஜெபா்சன் வினிஸ்லால் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மனைவி, எனது பாலியல் ரீதியான விடியோக்களை பலரிடம் பகிா்ந்துள்ளாா்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தேன். ஆனால் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கு சைபா் கிரைம் போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் இதுவரை செய்யப்பட்ட விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய தக்கலை காவல் துணை கண்காணிப்பாளருக்கும், வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சைபா் கிரைம் விசாரணை அதிகாரிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com