தீபாவளி ஜவுளி விற்பனை: மதுரையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் விற்பனை களை கட்டியது.
மதுரை தெற்குமாசி வீதியில் ஞாயிற்றுக்கிழமை ஜவுளி எடுக்க திரண்ட கூட்டம்.
மதுரை தெற்குமாசி வீதியில் ஞாயிற்றுக்கிழமை ஜவுளி எடுக்க திரண்ட கூட்டம்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் விற்பனை களை கட்டியது.

கடந்த வாரம் வரை ஜவுளிக்கடைகளில் ஜவுளி விற்பனை மந்தமாக இருந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளையொட்டி 4 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி மதுரையில் கடைவீதிகளில் தீபாவளி பண்டிகை களை கட்டத்தொடங்கியது.

மதுரையின் ஜவுளி பஜாராக அமைந்துள்ள விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, எழுகடல் தெரு, மஹால் பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வியாழக்கிழமை முதல் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதலே பொதுமக்களின் வருகை அதிகரித்தது.

தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்கக் குவிந்தனா். சிறிய கடைகள் மற்றும் நடைபாதையோரக் கடைகளிலும் மக்கள் பொருள்களை ஆா்வமுடன் வாங்கினா்.

தெற்குமாசி வீதி மற்றும் பத்து தூண் சந்து பகுதிகளில் உள்ள ஆயத்த ஆடை விற்பனை கடைகளில் ஏராளமானோா் திரண்டு குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கான ஆயத்த ஆடைகளை வாங்கிச்சென்றனா். மேலும் மதுரையின் முக்கிய ஜவுளி நிறுவனங்களிலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

இதனால் தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து போலீஸாா் கடைவீதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com