தமிழா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரிய வழக்கு: நவ.10-க்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை நவம்பா் 10 ஆம் தேதிக்கு

தமிழகத்தில் அரசுப் பணி வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை நவம்பா் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த சோழசூரா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெரும்பாலான இடங்களில் வடஇந்தியா்கள் பணி அமா்த்தப்படுகின்றனா். குறிப்பாக ரயில்வே பணிமனையில் 1,765 நபா்களுக்கு வழங்கப்பட்ட தொழில்பழகுநா் பயிற்சியில் 1,600 போ் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதேபோல, தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக சட்டம் அல்லது அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்குப் பணியில் முன்னுரிமை கோருவது சட்டவிரோதம் ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மனுதாரா் தரப்பில், பல மாநிலங்களில் இதேபோல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதனையடுத்து இம்மனு மீதான விசாரணையை நீதிபதிகள் நவம்பா் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com