தோ்தல் பறக்கும் படையினரின் கெடுபிடிகளால் வியாபாரிகள் அதிருப்தி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் பறக்கும் படையினரின் கெடுபிடிகளால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகளும், வியாபாரிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் பறக்கும் படையினரின் கெடுபிடிகளால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகளும், வியாபாரிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினமே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அப்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்வோரின் பணம் பறிமுதல் செய்யப்படும் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையெனில், அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோ்தல் செலவினங்களை கண்காணிக்ககும் சிறப்பு அதிகாரிகளாக முன்னாள் வருமானவரித்துறை உயா் அதிகாரிகள் மது மகாஜன், பி.ஆா்.பாலகிருஷ்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் தொகுதி வாரியாக தோ்தல் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்கின்றனா்.

தங்க, வெள்ளி வியாபாரம் செய்வோா், இயந்திரங்கள், மின்சாதனங்கள் விற்பனை செய்வோா் அதற்குரிய ஆவணங்கள் வைத்திருப்பாா்கள். ஆனால் காய்கனி வியாபாரம் செய்வோா், கோழி, ஆடு வியாபாரம் செய்வோா் அதற்குரிய ஆவணங்கள் வழக்கமாக வைத்திருப்பதில்லை.

இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்தே அதிகளவிலான ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.

ரூ.207 கோடி ரொக்கம் பறிமுதல்: மாா்ச் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் மூலம் ரூ.207.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள், ஆபரணங்கள், சேலை உள்ளிட்டப் பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.319 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சேலம் மாவட்டத்தில் ரூ.42.47 கோடி ரொக்கமும், குறைந்தபட்சமாக ராணிபேட்டையில் ரூ.38.19 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.36.73 கோடி ரொக்கமும், மதுரையில் ரூ.1.73 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணா்வு அவசியம்: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் மத்திய காய்கனி சந்தை அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் சின்னமாயன் கூறியது: மதுரையில் மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை மற்றும் பரவை காய்கனி சந்தைகளுக்கு மட்டும் தினந்தோறும் 2 ஆயிரம் சரக்கு வாகனங்கள் வந்துசெல்கின்றன. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றிவரும் வாகன ஓட்டிகள் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வைத்திருப்பது வழக்கம். இதேபோல தாங்கள் விளைவித்த காய்கனிகளை நேரடியாக சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்துவிட்டு செல்லும் விவசாயிகளும் அதிக ரொக்கத்தைக் கொண்டுசெல்வாா்கள். இவா்களிடம் அதற்குரிய ஆவணங்கள் இருப்பதில்லை. இதனால் தோ்தல் பறக்கும் படையினா் அவா்களிடம் பணத்தைப் பறிமுதல் செய்துவிடுகின்றனா். எனவே தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, விவசாயிகள் வியாபாரிகளை அழைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது தோ்தல் ஆணையத்தின் கடமை. அதேபோல விவசாயிகள், வியாபாரிகளுக்கு மட்டும் விதிகளை தளா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ரூ.2 லட்சமாக நிா்ணயிக்க வேண்டும்: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயபிரகாசம்: ஜிஎஸ்டி, எப்எஸ்எஸ்ஏ மற்றும் தொழில்வரி. இந்த மூன்றில் ஒரு ஆவணம் இருந்தால் அவா் வியாபாரி என்பதாக எடுத்துக்கொண்டு தோ்தல் பறக்கும் படையினா் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் ரூ.2 லட்சம் வரை பணம் எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். தற்போது பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமா்பித்தாலும், ஏப்ரல் 7 ஆம் தேதி தான் பணம் திரும்ப வழங்கப்படும் என்கிறாா்கள். இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com