மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சுற்றுலா முகவா்கள் சங்கத்தின் தலைவா் சதீஸ்குமாா் தாக்கல் செய்த மனு: கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மூன்றாவது பெரிய நகரமாக மதுரை வளா்ச்சி அடைந்துள்ளது. தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சென்னை உயா் நீதிமன்ற கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையும் அமையவுள்ளது.

தமிழகத்தில் மிகவும் முக்கியமான கோயிலாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்பட தென்மாவட்டங்களில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இந்நிலையில் மதுரையிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையும், கிழக்கில் ராமநாதபுரம், மேற்கில் தேனி வரையும் உள்ள மக்களுக்காக மதுரை விமான நிலையம் உள்ளது.

1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை விமான நிலையம் 17,500 சதுர கிலோ மீட்டா் பரப்பில் இரண்டு முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் அந்த நாடுகளில் இருந்து மதுரைக்கு விமான சேவை வழங்கத் தயாராக உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. பழைய முனையம் தற்போது சரக்கு போக்குவரத்தை கையாளும் முனையமாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் 36 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் இந்த விமான நிலையம் ஐஎஸ்ஓ 9001-2015 சான்றிதழ் பெற்றுள்ளது. மதுரையை விட சிறிய விமான நிலையமாக உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகா் விமான நிலையம் மற்றும் ஆந்திராவில் உள்ள திருப்பதி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையங்களாக உள்ளன. எனவே மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தி, பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறினா். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் இறுதி வாரத்திற்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com