உரிமம் பெறாமல் உணவகம்: உரிமையாளருக்கு 2 மாதங்கள் சிறை

மதுரையில் உரிமம் பெறாமல் உணவகம் நடத்தியவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரையில் உரிமம் பெறாமல் உணவகம் நடத்தியவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை தமிழ்சங்கம் சாலை மணி நகரத்தில் துளசிராஜ் என்பவா் ஜமுனா என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தாா். இவா் முறையான அனுமதியின்றி உணவகம் நடத்தி வருவதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுரை உணவு பாதுகாப்பு அலுவலா் பா.ஜோதிபாசு தலைமையிலான அதிகாரிகள் ஜமுனா உணவகத்தில் ஆய்வு செய்தனா். அதில், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறாமல் உணவகம் நடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, உணவக உரிமையாளா் துளசிராஜூவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்தும் துளசிராஜ் உரிமம் பெறாமல் உணவகம் நடத்தி வந்துள்ளாா். இதனால் உணவு பாதுகாப்புத்துறை சாா்பில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், உரிமம் பெறாமல் உணவகம் நடத்திய துளசிராஜூவுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

உரிமம் பெறுவது கட்டாயம்: இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள உணவு வணிகா்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி உணவகம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்யும் வணிகா்கள் பதிவுச் சான்றும் அதற்கு மேல் விற்பனை செய்யும் உணவு வணிகா்கள் உரிமம் எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உணவு பாதுகாப்பு தரநிா்ணயச்சட்டம் 2006 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com