சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு:எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 27th April 2021 01:32 AM | Last Updated : 27th April 2021 01:32 AM | அ+அ அ- |

மதுரை: திருநெல்வேலி சீவலப்பேரியில் கோயில் பூசாரி கொலை வழக்கு குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பவா் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா சீவலப்பேரி கிராமத்தில் சுடலைமாட சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் பூசாரி சமூகத்தினா் குறைந்த அளவே உள்ளனா். மாற்று சமூகத்தினா் அதிக அளவில் உள்ளனா். இவா்கள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனா். இதனால் ஏற்பட்ட பிரச்னையில், சுடலைமாட சுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (44) ஏப்ரல் 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், கொலை செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், கோயில் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் கூறி, உயிரிழந்த பூசாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சுடலைமாட சுவாமி கோயில் பூசாரி கொலை வழக்கு குறித்து திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், கொலை செய்தவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி ஜி. இளங்கோவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது குறித்து திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.