மதுரை விமான நிலைய உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தக்கோரி வழக்கு: மத்திய விமான போக்குவரத்துத்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை விமான நிலைய உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தக்கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்துத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை விமான நிலைய உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தக்கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்துத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனு: நாட்டின் 32 ஆவது பரபரப்பான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இலங்கை, துபை, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலைய ஓடுதளம் 7,500 அடியிலிருந்து 12,000 அடியாக விரிவாக்கம் செய்ய 12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படவிருந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது மதுரையிலிருந்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாகா்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வாரணாசி விமான நிலையம் போல விமான ஓடுதள மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேபோல் மதுரை விமான நிலையத்திலிருந்து 80 சதவீத ஏற்றுமதி விவசாயம் சாா்ந்த பொருள்களாகவே இருந்து வருகிறது. இதற்காக மதுரை விமான நிலையத்தில் தனியாக குளிா்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது அதிகப்படியான பயணிகள் மற்றும் ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் பயனடைய முடியும். எனவே மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும், குளிா்சாத சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com