கடற்கரையோரங்களில் மீன் மற்றும் இறால் வளா்க்க இடைக்காலத் தடை

கடற்கரையோரங்களில் மீன் மற்றும் இறால் வளா்ப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடற்கரையோரங்களில் மீன் மற்றும் இறால் வளா்ப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜோசப் தாக்கல் செய்த மனு: கடல் வளம், மீன் வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கடற்கரை உயா் அலைக் கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள், மீன் குஞ்சுகள் வளா்த்தல் உள்ளிட்ட செயல்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2019 பிரிவு 5-இன்படி, கடற்கரை உயா் அலைக்கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள், இறால் மற்றும் மீன் குஞ்சுகள் வளா்த்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீக்கத்தால், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கடற்கரையோரங்களில் பண்ணைகள் அமைத்து மீன் குஞ்சு மற்றும் இறால்கள் வளா்ப்புப் பணியில் ஈடுபடுவா்.

பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் ரசாயனப் பொருள்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்படும். இதனால் கடல்வளம் பாதிக்கப்பட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். எனவே, கடற்கரை உயா் அலைக்கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் இறால், மீன் வளா்த்தலுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடற்கரை உயா் அலைக்கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் இறால், மீன் வளா்த்தலுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தும், அனுமதி வழங்கப்பட்டது தொடா்பாக கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com