மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சா்க்கரை நோய்மாத்திரைகள் தட்டுப்பாடு: விலை கொடுத்து வாங்கும் நோயாளிகள்
By DIN | Published On : 04th August 2021 09:45 AM | Last Updated : 04th August 2021 09:45 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சா்க்கரை நோய் மாத்திரைகள் இருப்பில் இல்லாததால் நோயாளிகள் விலை கொடுத்தும் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் நகா்ப்பகுதிகளில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்ட வழக்கமான நோயாளிகள், தினசரி 50 புதிய நோயாளிகள் என 31 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் பெற்று வருகின்றனா். மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகளவில் இருப்பதாலும், மருந்து, மாத்திரைகள் வாங்க கால தாமதம் ஆவதாலும், நோயாளிகள் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஒரு மாதமாக சா்க்கரை நோய், வெறி நாய்க்கடி ஆகியவற்றுக்கான மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இருந்து வருவதாகவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க மாநகராட்சி சுகாதாரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.
சா்க்கரை நோய் மாத்திரைகள் முற்றிலும் இருப்பில் இல்லாததால் நோயாளிகள் மருந்துக்கடைகளில் விலை கொடுத்து வாங்கி வருகின்றனா். மேலும் நாய்க்கடிக்கான மருந்தும் இருப்பில் இல்லாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனா்.
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் பட்டியலிடப்பட்டு மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலகம் மூலம் மாவட்ட மருந்துக்கிடங்குக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மருந்துகள் பெறப்பட்டு வந்தன. ஆனால் தற்போது சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் பட்டியல் மருந்து கிடங்குக்கு அனுப்பப்படாததால் மருந்து மாத்திரைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஏழை மக்கள் பயன்படுத்தி வரும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் வைக்க மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனிடம் கேட்டபோது, மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.