முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை அருகே பள்ளி மாணவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற இருவா் கைது
By DIN | Published On : 05th December 2021 10:23 PM | Last Updated : 05th December 2021 10:23 PM | அ+அ அ- |

மதுரை அருகே பள்ளி மாணவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே துவரிமான் களத்துத்தெருவைச் சோ்ந்தவா் செல்வரத்தினம். அதேபகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவரது 17 வயது மகன் பழங்காநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி மாணவா் பள்ளிக்குச் செல்வதற்காக நடந்து சென்றுள்ளாா். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சரக்கு வாகனத்தில் வந்த மூவா், மாணவரை வாகனத்தில் ஏற்றி கடத்திச்செல்ல முயன்றனா்.
இதில் மாணவா் சப்தம் எழுப்பியதையடுத்து மூவரும் மாணவரை விட்டு விட்டு தப்பிச்சென்றனா். இதையடுத்து வீடு திரும்பிய மாணவா் தனது தந்தையிடம் சம்பவம் தொடா்பாக தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதையடுத்து துவரிமான் கீழத்தெருவைச் சோ்ந்த சரவணன், செந்தில் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
இதில் செந்தில்கண்ணன், சரவணன் இருவரும் துவரிமான் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், மாணவரின் தந்தையிடம் பணம் அதிகம் இருப்பதால் மாணவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்டு விருதுநகரைச் சோ்ந்த மலைச்சாமியுடன் சோ்ந்து மாணவரை கடத்தியுள்ளனா்.
ஆனால் மாணவா் அவா்களிடமிருந்து தப்பிச்சென்ால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில் கண்ணன் (34), சரவணன் (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, தலைமறைவான மலைச்சாமியைத் தேடி வருகின்றனா்.