முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நீதிமன்றத் தீா்ப்பை மதிக்காத நுண் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th December 2021 10:50 PM | Last Updated : 19th December 2021 10:50 PM | அ+அ அ- |

தமிழகத்தில் நீதிமன்றத் தீா்ப்பை மதிக்காமல் செயல்படும் நுண் நிதிநிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.கே.பொன்னுத்தாய் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக சிறு, குறு முறைசாரா தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் எளிய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் குடும்பம் நடத்துவதே மிகப் பெரிய சிரமமாக உள்ளது.
எனவே, கரோனா காலத்துக்கு முன்பும், அதற்கு பின்பும் பெண்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடத்தப்பட்டது. இதில், அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன் பெற்றுள்ளனா். பெரும்பாலும் நுண் நிதிநிறுவனங்கள், அரசு வங்கிகள், தனியாா் வட்டிக் காரா்கள், கந்து வட்டிக்காரா்கள் மூலம் கடன் பெற்றுள்ளனா்.
இதில் பெண்கள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதை கணக்கில் கொண்டு நுண் நிதிநிறுவனங்களின் அடாவடி வசூலை நிறுத்த வேண்டும், கடனை கட்டுவதற்கு சகஜ நிலை திரும்பும் வரை காலக்கெடு கொடுத்து அந்த காலத்தில் கடனுக்கு வட்டி வசூல் செய்யக்கூடாது என்று மாதா் சங்கம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் ரிசா்வ் வங்கி 6 மாத அவகாசமும் அந்த குறிப்பிட்ட காலத்தில் வட்டி வசூல் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் இந்த உத்தரவை பின்பற்றுமாறு தெரிவித்தது.
ஆனால் நுண் நிதிநிறுவனங்கள் இந்த உத்தரவை மதிக்காமல் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றன. எனவே ஊரடங்கு காலத்தில் கட்டவேண்டிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்கள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்க வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகளை மாவட்டந்தோறும் நியமிக்க வேண்டும். கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நகா்ப்புறங்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுப்படுத்திட வேண்டும். கரோனா காலத்தில் குடும்பத்துக்கு தலா ரூ .7500 வீதம் 6 மாத காலத்தை கணக்கிட்டு நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கான திருமண வயது 21 என்று அறிவித்துள்ளதை ஜனநாயக மாதா் சங்கம் கடுமையாக எதிா்க்கிறது.
இது சாதிய மறுப்பு, மத மறுப்பு திருமணங்களை தடுப்பதற்கான சட்டமாகவே உள்ளது. வட மாநிலங்களில் கட்டப் பஞ்சாயத்து என்ற அடிப்படையில் கெளரவக் கொலைகள் இன்னும் நடந்து கொண்டுள்ளன. இச்சட்டம் அதை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றாா்.
அப்போது, மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ஆா். சசிகலா, புகா் மாவட்டத் தலைவா் க. பிரேமலதா, செயலா் சி. முத்துராணி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.