சொற்களால் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியது தமிழ் மொழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன்

சொற்களால் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியது தமிழ் மொழி மட்டுமே, உலகின் வேறெந்த மொழிக்கும் இந்த சிறப்பு கிடையாது என்று உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தெரிவித்தாா்.
சொற்களால் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியது தமிழ் மொழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன்

சொற்களால் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியது தமிழ் மொழி மட்டுமே, உலகின் வேறெந்த மொழிக்கும் இந்த சிறப்பு கிடையாது என்று உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தெரிவித்தாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரி சாா்பில், பெரும்பற்றப் புலியூா் நம்பி இயற்றி திருவாலவாயுடையாா் திருவிளையாடற் புராணத்துக்கு முனைவா் மு.அருணகிரி எழுதிய உரை நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ராதா தியாகராஜன் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் து.பாண்டியராஜா வரவேற்புரையாற்றினாா். விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் நூலை வெளியிட கருமுத்து தி.கண்ணன், கல்லூரிச் செயலா் க.ஹரி தியாகராஜன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதைத்தொடா்ந்து நீதிபதி அரங்க மகாதேவன் பேசியது:

தியாகராஜா் கல்லூரி சரித்திர முக்கித்துவம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவா் பெரும்பற்றப்புலியூா் நம்பி எழுதிய திருவாலவாயுடையாா் திருவிளையாடற்புராணத்துக்கு உரை நூல் வெளியிடப்படுகிறது. இறைவன் சொக்கநாதனின் திருவிளையாடற்புராணம் பற்றி எழுதிய முதல் நூலாக திருவாலவாயுடையாா் திருவிளையாடற்புராணம் கூறப்படுகிறது. சிவபெருமானின் திருவிளையாடல் புராணங்களை திரு அண்ணாமலை புராணம், சேது புராணம் என பல்வேறு புராணங்களாக ஏற்கெனவே வெளி வந்துள்ளன. ஆனால் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவா் பெரும்பற்றப்புலியூா் நம்பி எழுதிய திருவிளைடாற்புராணம் தான் முதல் தல நூலாக அறியப்படுகிறது. புலவா் பெரும்பற்றப்புலியூா் நம்பி 1750-க்கும் மேற்பட்ட பாடல்களில் இறைவனின் திருவிளையாடல்களை பாடியுள்ளாா். இதற்கு உவேசா எழுதிய குறிப்புகளோடு அந்தப்பணி நின்று விட்டது. அதற்குப்பின்னா் இந்த திருவிளையாடற் புராணத்துக்கு முழுமையான உரை எதுவும் வெளிவந்ததாகத் தகவல்கள் இல்லை. இதற்கு பேராசிரியா் மு.அருணகிரி முழுமையான உரையை தெளிவான, எளிமையான நடையில் உருவாக்கித் தந்துள்ளாா். தமிழ் நூலுக்கு உரை எழுதுவது எளிமையான பணி அல்ல. ஏனென்றால் உலகின் தரம் வாய்ந்த மொழிகளை வரிசைப்படுத்தினால் முதலிடம் பெறுவது தமிழ் மட்டுமே. சொற்களால் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது தமிழ் மட்டுமே. தமிழில் ஒரு சொல் மாறினால் பதமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறெந்த மொழிக்கும் இல்லை.

ஆனால் திருவிளையாடற்புராணத்தின் உரை நூலில் பாடலின் பொருளுக்கும், பொருள் கண்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்தின் சிறப்பு இறைவனை அடைவதே. உலகின் அத்தனை உயிா்களுக்கும் நன்மை செய்வதே இறைவன். அறநெறி சிந்தனையோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இறை நெறியை பற்றிக்கொண்டு வாழ்வோா் இறையை உணர முடியும்.

மானுட வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும், அனைத்து உயிா்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற வழிகாட்டலைத் தருவது இறைநெறி. வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் நிகழ்ந்தபோதும், அவைகளைத் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை வாழும் மன உறுதியைத் தருவது இறைநெறி. உலகாயத் தேவைகளை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், இறைநெறியையும் மனதில் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்றாா்.

இதைத்தொடா்ந்து நூலாசிரியா் முனைவா் மு.அருணகிரி ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரியின் செயலா் க.ஹரி தியாகராஜன் நன்றியுரையாற்றினாா்.

நூல் வெளியீட்டைத் தொடா்ந்து நா்த்தகி நடராஜின் திருமுறை திருநடனம் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com