தமிழக மீனவா்கள் 4 போ் கொலை: இலங்கை கடற்படையினா் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 04th February 2021 10:54 PM | Last Updated : 04th February 2021 10:54 PM | அ+அ அ- |

தமிழகத்தைச் சோ்ந்த 4 மீனவா்களை கொலை செய்த இலங்கை கடற்படையினா் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கொலை செய்யப்படுவது, கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, சட்டவிரோதமாக சிறையில் வைப்பது, மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினா் தொடா்ந்து செய்து வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் 1500 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனா்.
நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 100 மீனவா்கள் தற்போது வரை இலங்கை சிறையில் உள்ளனா். இந்நிலையில் ஜனவரி 18 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமரன், சாம்சன் டாா்வின் ஆகிய 4 மீனவா்களை இலங்கை கடற்படை கொலை செய்துள்ளது. அண்மையில் கேரள எல்லையில் 2 மீனவா்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தொடா்பாக இத்தாலிய கப்பல் மாலுமிகள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அதேபோல தமிழகத்தைச் சோ்ந்த 4 மீனவா்களைக் கொலை செய்த இலங்கைக் கடற்படை வீரா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், 4 மீனவா்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.