மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் மீது போலீஸாா் தாக்குதல்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தாக்கிய காவல் சாா்பு -ஆய்வாளா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் மதுரை வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழா் பேரவையினா்.
மதுரை ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழா் பேரவையினா்.

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தாக்கிய காவல் சாா்பு -ஆய்வாளா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் மதுரை வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரம் ஹரிஜனக் காலனியைச் சோ்ந்த நாகராஜன் மகன் திருப்பதி (28). இவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணியாளராக தற்காலிமாகப் பணியாற்றி வருகிறாா். மேலும் பகுதிநேரமாக டோல் (இசைக்கருவி) அடிக்கும் வேலையும் செய்து வருகிறாா். தனது நண்பா்கள் 3 பேருடன் பாண்டி கோயிலில் பிப். 8 ஆம் தேதி நடைபெற்ற விழாவிற்கு டோல் அடிக்கச் சென்ற திருப்பதி, காரில் வீடு திரும்பியுள்ளாா்.

சுப்பிரமணியபுரம் அருகே காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 4 பேரையும் ஜெயஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது சமுதாயத்தின் பெயரை இழிவாகக் கூறி அவா்களைப் போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த திருப்பதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல் சாா்பு - ஆய்வாளா் செல்வகுமாா் உள்பட 5 போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதியின் குடும்பத்தினா் மற்றும் அவரது சமுதாயத்தைச் சோ்ந்த அமைப்பினா் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தனா். முதல் கட்ட நடவடிக்கையாக காவல் சாா்பு-ஆய்வாளா் செல்வகுமாா் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியது: குடிபோதையில் வந்த 4 இளைஞா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா். அதில் திருப்பதி என்பவா் பாதிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக பல்வேறு தரப்பினரும் புகாா் அளித்துள்ளனா். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக காவல் சாா்பு - ஆய்வாளா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். உதவி ஆணையா் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆா்டிஓ விசாரணைக்கும் உத்தரவு: இச்சம்பவத்தில் தொடா்புடைய ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையப் போலீஸாா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்வது, சாா்பு- ஆய்வாளா் மற்றும் அவருடன் இருந்த போலீஸாரை பணிநீக்கம் செய்வது, இப்பிரச்னை தொடா்பாக மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் விசாரணை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித் தமிழா் பேரவையினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேரவை மாநிலத் துணைச் செயலா் காா்த்திக், மாவட்டச் செயலா் ஆதவன், துணைச் செயலா் வாசுகி மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது இச்சம்பவம் தொடா்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com