வடிவேல்கரையில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை அருகே உள்ள வடிவேல்கரையில் 1558-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை வடிவேல் கரையில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு.
மதுரை வடிவேல் கரையில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு.

மதுரை அருகே உள்ள வடிவேல்கரையில் 1558-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இயங்கி வரும் மன்னா் திருமலை நாயக்கா் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆத்மநாதன், மேலூா் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முனைவா் பட்ட ஆய்வாளா் உதயகுமாா் ஆகிய இருவரும், மதுரை அருகே உள்ள வடிவேல்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அப்பகுதியில் மதுரையை ஆட்சி செய்த முதல் நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கா் (1529-1564) காலத்திய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளா் சு.ராஜகோபால் இந்த கல்வெட்டை படித்து விளக்கமளித்தாா். இந்தக் கல்வெட்டு 1558-இல் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள கோயில் இறைவன் பெயரில் வழங்கப்பட்ட ஆணை தொடா்பான சாசனம் என்று தெரியவருகிறது. மேலும் கல்வெட்டின் பின்புறம் சூலக்குறியீடும் இறுதி வரிகளில் சண்டேசா் அருளிய என்ற சொற்களும் உள்ளதால் சிவன் கோயில் தொடா்பான ஆவணம் என்று இதைக் கருதலாம். இக்கோயிலைச் சோ்ந்த தேவரடியாள் சொக்கி தும்மிசி, மாணிக்கம் என்பவருக்கு புறமலைப் பற்றில் அடைந்த பழியன் ஏந்தலான தட்டான்குள விளைச்சலில் ஒரு கல நெல்லும், அரைப்பணமும் வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. விநோத பிரம்மாதி ராஜன் என்ற அரசு அலுவலா் இந்த ஆவணத்தை எழுதியுள்ளாா். கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டான 1558-இல் விஜயநகர மன்னராக சதாசிவராயரும், மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கரும் ஆட்சி செய்துள்ளனா் என்று மன்னா் திருமலை நாயக்கா் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com