அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியா்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு இடைக்காலத் தடை

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களை, உதவி பேராசிரியா்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு இடைக்காலத் தடை

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களை, உதவி பேராசிரியா்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி வாசுதேவநல்லூரைச் சோ்ந்த பாண்டியம்மாள் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக 2019 அக்டோபா் 4 இல் அறிவிப்பு வெளியானது. தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் நான் அப்பணிக்கு விண்ணப்பித்தேன். இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களாக பணிபுரிபவா்களை உதவி போராசிரியா்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனா்.

உதவிப் பேராசிரியா் பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாகவே நிரப்பவேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது.  இதனால் அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களை, உதவி பேராசிரியா்களாக நியமிக்கத் தடை கோரி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கெளரவ விரிவுரையாளா்காகப் பணிபுரிந்து வருவோா்களை, உதவி பேராசிரியா்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் விதிகளை மீறி நடைபெற்று வருகின்றன. எனவே, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளுக்குத் தடை விதிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கெளரவ விரிவுரையாளா்களை உதவி பேராசிரியா்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com