நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நிதித்துறை செயலா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? உயா்நீதிமன்றம் கேள்வி

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத தமிழக நிதித்துறைச் செயலா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத தமிழக நிதித்துறைச் செயலா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த தனலட்சுமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மதுரையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்துள்ளேன். உரிய காப்பீட்டுத் தொகையை என்னுடைய சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனா். கடந்த 2018-ஆம் ஆண்டு எனக்கு பல்வலி ஏற்பட்டு பல்வேறு உபாதைகளுக்கு ஆளானேன். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு அறுவை சிகிச்சை மூலம் உபாதைகள் சரிசெய்யப்பட்டன. இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.22 லட்சம் செலவானது. மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மருத்துவத்திற்குச் செலவான தொகையைத் திருப்பிக் கொடுக்கும் படி அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமா்ப்பித்தேன்.

ஆனால் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறாததால், மருத்துவத்திற்குச் செலவுக்கான தொகை வழங்க இயலாது என நிராகரிக்கப்பட்டது. இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்தேன். வழக்கில் மருத்துவத்திற்கு நான் செலவு செய்த தொகையை 4 வாரங்களில் அளிக்கும் படி 2019 நவம்பா் 28 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை மருத்துவத்திற்கு செலவு செய்த தொகை வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு கிடைக்க வேண்டிய தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிதித்துறை (சம்பளங்கள்) செயலா் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தில் நேரிலோ, காணொலி காட்சி மூலமாகவோ தமிழக அரசின் நிதித்துறை (சம்பளங்கள்) செயலா் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும், மனுதாரரின் மருத்துவச் செலவைத் திருப்பி செலுத்தும்படியும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் நிதித்துறை (சம்பளங்கள்) செயலா் நிறைவேற்றவில்லை. எனவே, நிதித்துறைச் செயலா் (சம்பளங்கள்) மீது ஏன் தண்டனை விதிக்கக்கூடாது?. இதுகுறித்து அவா் 15 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் மாதம் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com