மதுரையில் தீவிபத்து: 15 கடைகள் எரிந்து சேதம்

மதுரை டவுன்ஹால் சாலையில் பெருமாள் கோயில் தெப்பக்குளம் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை டவுன்ஹால் சாலையில் பெருமாள் கோயில் தெப்பக்குளம் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் மதிப்புள்ள துணி, மின்னணு சாதனங்கள் உள்ளிட்டப் பொருள்கள் கருகின.

மதுரை டவுன்ஹால் சாலையில் பெருமாள் கோயில் கோயில் தெப்பக்குளம் அருகே செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் விற்பனைக் கடைகள், செருப்புக்கடைகள், துணிக்கடைகள், மின்னணு சாதனங்கள் விற்பனைக் கடைகள் என வரிசையாக கடைகள் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் பெரும்பாலான கடைகளை வழக்கம்போல அடைத்துவிட்டு அனைவரும் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனா். அப்போது இரவு 11 மணி அளவில் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பின்னே உள்ள கடையில் தீப்பற்றியது. இதுகுறித்து அருகே இருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். பெரியாா் மற்றும் திடீா்நகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 30 போ் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்தக் கடைகளுக்கு பரவியது. இதனால் தீயணைக்கும் பணியில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒருபுறம் அணைத்தால், மறுபுறம் தீப்பற்றிக்கொண்டே சென்றது. இதனால் இரவு 12.30 வரை தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இதில் செருப்புக் கடைகள், துணிக்கடைகள், செல்லிடப்பேசி உதிரிப்பாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனைக் கடைகள் என மொத்தம் 15 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், செருப்புகள், மின்னணு சாதனங்கள் தீயில் கருகின. இதனால் இப்பகுதி முழுவதும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரின் முக்கியப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியின் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு நிலைய வண்டிகள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதற்கு மதுரை மாநகராட்சியின் 10 தண்ணீா் லாரிகள் மூலம் தண்ணீா் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. திலகா்திடல் போலீஸாா் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com