நக்ஸல்கள் தாக்குதலில் வீரமரணமடைந்தஎல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உடலுக்கு ஆட்சியா் அஞ்சலி
By DIN | Published On : 27th February 2021 12:35 AM | Last Updated : 27th February 2021 12:35 AM | அ+அ அ- |

நக்ஸலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் பால்சாமி.
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் பால்சாமியின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பால்சாமி (33). இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தாா். இந்நிலையில் இவா் சத்தீஸ்கா் மாநிலம் சோன்பூா் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது நக்ஸல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பால்சாமி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான பொய்கைக்கரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மதுரை கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், ஊமச்சிகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா், ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பால்சாமிக்கு, ராமலட்சுமி (28) என்ற மனைவியும், ரித்திக்ஷா (2) என்ற மகளும் உள்ளனா்.