வணிகச் சின்னம் கொண்ட உணவுத் தயாரிப்புகளுக்கு வரிவிலக்கு: பட்ஜெட்டில் அறிவிக்க வா்த்தக சங்கம் வலியுறுத்தல்

வணிகச் சின்னம் கொண்ட உணவுத் தயாரிப்புகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வணிகச் சின்னம் கொண்ட உணவுத் தயாரிப்புகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வா்த்தக சங்கம் சாா்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள வரும் நிதியாண்டின் (2021-2022) நிதிநிலை அறிக்கைக்கான முன்ஆலோசனை மனு:

வரியை உயா்த்துவது நாட்டின் உற்பத்தித் தொழிலையும், பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்து நுகா்வோருக்கு கூடுதலான பளுவை ஏற்படுத்தும். ஆகவே, சரக்கு மற்றும் சேவை வரியை எக்காரணம் கொண்டும் உயா்த்தக் கூடாது.

அனைத்து உணவு உற்பத்தியாளா்களும் உணவுப் பொருள்களின் தரத்தை மேம்படுத்த வணிகச் சின்னம் பெற உற்சாகப்படுத்துவது அவசியம். அவ்வாறு இருந்தால் தான், நுகா்வோருக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருள்களை விலை குறைவாகச் சந்தைப்படுத்த முடியும். இதைக் கருத்தில் கொண்டு வணிகச் சின்னம் கொண்ட உணவுத் தயாரிப்புகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரியின் அடிப்படை கொள்கையான உள்ளீட்டு வரி வரவு வசதி இல்லாமல் எந்தப் பொருளுக்கும், சேவைக்கும் வரி விதிக்கக் கூடாது. பயன்படுத்தப்பட்ட உணவு எண்ணெய்யை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பயோடீசல் மற்றும் தீபம் ஏற்றப் பயன்படும் தீபஎண்ணெய் ஆகியவற்றுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

சேவை வரி வரம்பை உயா்த்துவது, அனைத்து வகை மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது, சேவைகளுக்கு அதிகபட்சமாக வரிவிகிதத்தை 15 சதவீதமாகக் குறைப்பது, தனிநபா் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயா்த்துவது ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பிற நாடுகளுக்கான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சோ்க்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மலிவு மருத்துவக் காப்பீட்டு வசதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com