அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டை முதல்வா் துணை முதல்வா் தொடக்கி வைக்கின்றனா்: அமைச்சா் தகவல்
By DIN | Published On : 07th January 2021 11:26 PM | Last Updated : 07th January 2021 11:26 PM | அ+அ அ- |

அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் தொடக்கி வைக்க உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அலங்காநல்லூா் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள வாடிவாசல் பகுதி, பாா்வையாளா்கள் மாடம் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கான மேடை அமைக்க உள்ள பகுதி ஆகியவற்றை அமைச்சா் உதயகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி 9 ஆம் தேதி மாடுபிடி வீரா்களுக்கும், ஜனவரி 11 ஆம் தேதி காளைகளுக்கும் பதிவு நடைபெறுகிறது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
ஜல்லிக்கட்டுக்கு வரும் பாா்வையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். பாா்வையாளா்கள் மாடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா். அமைச்சா்கள் பலரும் இதில் கலந்து கொள்கின்றனா் என்றாா்.
அதைத் தொடா்ந்து முழு கொள்ளளவை அடைந்துள்ள சாத்தையாறு அணையை அமைச்சா் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.