அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து தரப்பினரையும் கொண்ட குழு அமைக்கக்கோரி மனு
By DIN | Published On : 07th January 2021 03:54 AM | Last Updated : 07th January 2021 03:54 AM | அ+அ அ- |

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து தரப்பினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவனியாபுரத்தைச் சோ்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட உதவி அமைப்பாளா் முனியசாமி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை அவனியாபுரத்தில் வாழும் அனைத்து சமூகத்தினரும் சோ்ந்து நடத்தி வந்தனா். தற்போது ஜல்லிக்கட்டு விழாவை அரசே நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழுவில் ஒரு பிரிவினருக்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
எனவே அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு விழாவை நடந்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய ஆலோசனைக்குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நிகழாண்டில் குறிப்பிட்ட சிலா் தாங்கள்தான் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழு என அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனா். ஜல்லிக்கட்டு ஆலோசனைக்குழுவில் அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினரை புறக்கணிப்பது சட்டவிரோதமாகும். எனவே ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய ஆலோசனைக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.