காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணி தொடக்கம்: கலப்பின மாடுகளுக்கு அனுமதியில்லை
By DIN | Published On : 07th January 2021 11:33 PM | Last Updated : 07th January 2021 11:33 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான மருத்துவப் பரிசோதனையை வியாழக்கிழமை பாா்வையிடும் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜதிலகன்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல்தகுதி பரிசோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. காளைகளின் உயரம் 120 செமீ-க்கு மேல் இருக்க வேண்டும். 3 வயதுக்கு மேற்பட்ட, திமில் உள்ள, நல்ல திடகாத்திரமான உடல் நிலையில் இருப்பது அவசியம். கண்ணில் நீா் வடிதல் மற்றும் உடல் பாதிப்புகள் இருக்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கப்படமாட்டாது.
அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணியை கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராஜதிலகன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். காளைகளின் வயதை உறுதி செய்ய பற்களின் வளா்ச்சி மற்றும் திமில் வளா்ச்சி ஆகியவற்றை கால்நடை மருத்துவா்கள் பாா்வையிட்டு தகுதிச் சான்று வழங்குமாறு அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியது:
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான உடல் தகுதிகள் அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள் காளைகளின் திமிலை மட்டுமே கைகளால் கட்டி அடக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும். இதன்படி, திமில் உள்ள நாட்டுரக காளைகளுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும். கலப்பின காளைகளுக்கு திமில் இருக்காது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான உடல் தகுதி இருக்கிறதா என்பதை மருத்துவா்கள் காளைகளை பாா்த்த உடனேயே உறுதி செய்துவிட முடியும். தகுதிச் சான்று வழங்கப்பட்டிருந்தாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளான்று மீண்டும் ஒருமுறை காளைகளுக்கு பரிசோதனைக்குப் பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றாா்.