கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 07th January 2021 11:44 PM | Last Updated : 07th January 2021 11:44 PM | அ+அ அ- |

மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை கிராம உதவியாளா்களுக்கு வழங்குவது, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்குவது, மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்குவதைப் போல குறைந்தபட்ச பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 5 கட்ட போராட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கினா். அன்றைய தினம் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மகாலிங்கம், நிா்வாகிகள் அண்ணாத்துரை, மணிகண்டன் உள்ளிட்ட கிராம உதவியாளா்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக, ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினா். அதற்குப் போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.