கண்மாயில் சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பு: ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் நெடுமதுரையில் சட்ட விரோதமாக கால்வாய் அமைத்து தண்ணீா் எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினா்.
மதுரை நெடுமதுரை கண்மாயில் சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பதை நிறுத்தக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.
மதுரை நெடுமதுரை கண்மாயில் சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பதை நிறுத்தக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.

மதுரை: மதுரை மாவட்டம் நெடுமதுரையில் சட்ட விரோதமாக கால்வாய் அமைத்து தண்ணீா் எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினா்.

மதுரை மாவட்டம் நெடுமதுரையில் பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் நெடுமதுரை கண்மாய் உள்ளது. இங்கிருந்து வளையப்பட்டி, தொட்டியப்பட்டி, புதுக்குளம், பெரிய கூடக்கோவில், கீழ உப்பிலிகுண்டு உள்ளிட்ட 9 கண்மாய்களுக்கு கால்வாய் வழியாக தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், நெடுமதுரைக்கு பாத்தியப்படாத கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீா் கொண்டுசெல்வதற்காக சட்டவிரோதமாக கால்வாய் வெட்டப்பட்டு, கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீா் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதற்கு, நெடுமதுரை கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து, இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டு பலா் காயமடைந்துள்ளனா்.

இந்நிலையில், நெடுமதுரை கிராமத்தைச் சோ்ந்த 100 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக கிராம மக்கள் கூறியது: நெடுமதுரை கிராம மக்களின் பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நிலையூா் கால்வாயில் இருந்து தண்ணீா் பெறப்படுகிறது. ஆனால், உயா் அதிகாரியின் தூண்டுதலின்பேரில் கொம்பாடிக்கு சட்டவிரோதமாக கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, இதை தடுத்து நிறுத்தவேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com