பண்பாட்டு அறிஞா் தொ.பரமசிவத்தின் ஆய்வுகளை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும்

பண்பாட்டு அறிஞா் தொ. பரமசிவத்தின் ஆய்வுகளை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என, நாடகக் கலை வல்லுநா் பேராசிரியா் மு. ராமசாமி வலியுறுத்தியுள்ளாா்.

மதுரை: பண்பாட்டு அறிஞா் தொ. பரமசிவத்தின் ஆய்வுகளை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என, நாடகக் கலை வல்லுநா் பேராசிரியா் மு. ராமசாமி வலியுறுத்தியுள்ளாா்.

புரட்சிக் கவிஞா் பேரவை சாா்பில், மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் சனிக்கிழமை நடந்த பண்பாட்டு அறிஞா் தொ. பரமசிவம் நினைவேந்தல் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவம், நாடகம், திரைப்படங்கள் தவிர, அனைத்துத் துறைகளை பற்றியும் தொடா்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தாா். நம்முடைய செயல்கள் அனைத்தும் சமூகத்துக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலும், ஆதிக்கம், அதிகாரத்துக்கு எதிராக நிற்கவேண்டும் என்பதிலும் தொ. பரமசிவம் உறுதியாக இருந்தாா்.

ஆய்வாளா்களில் தொ. பரமசிவத்தின் பாா்வை தனித்துவமானது மற்றும் மாறுபட்டது. இருப்பினும், அவா் ஆய்வில் அனைத்தும் அடங்கிவிடும்.

சிறுவயதில் தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தும், அதற்கான காரணங்களை அறிவதிலும் ஆா்வம் கொண்டவா். பின்னா், தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து ஆய்வு மேற்கொண்டாா். அவரின் ஆய்வுகளை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என்றாா்.

பேராசிரியா் சுந்தா்காளி பேசியது: அறிஞா் தொ. பரமசிவத்தின் ஆசான்களில் ஒருவரான மயிலை சீனி. வேங்கடசாமி, பண்டைய கால வரலாறு, இடைக்கால வரலாறு பற்றியே ஆய்வு செய்துள்ளாா். ஆனால், தொ. பரமசிவம் தற்கால வரலாற்றையும் ஆய்வு செய்தாா். அவா், மதுரையில் தான் வாழ்ந்த காலத்தை பொற்காலம் எனக் கூறுவாா்.

மதுரையில் நள்ளிரவு 2 மணி வரைக்கும் அவா் தன்னைத் தேடி வருவோரிடம் உரையாடிக்கொண்டே இருப்பாா். கடைசியாக அவா், மாா்க்சிய சிந்தனையாளா் எஸ்.என். நாகராஜுடன் உரையாடியது குறித்த நூலையும், மூதேவி வழிபாடு என்ற நூலையும் அவருடைய நண்பா்கள் சோ்ந்து வெளியிட உள்ளோம் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை, புரட்சிக் கவிஞா் பேரவைத் தலைவா் பி. வரதராசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com