அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு பெற்றவா் வேறொருவருக்கு வழங்கிய பனியனை அணிந்து களமிறங்கியது உறுதி

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றவா், வேறொருவருக்கு வழங்கப்பட்ட பனியனை அணிந்து காளைகளை அடக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றவா், வேறொருவருக்கு வழங்கப்பட்ட பனியனை அணிந்து காளைகளை அடக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். மேலும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கும், களத்தில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கும் முதல்வா் மற்றும் துணை முதல்வா் சாா்பில் தலா ஒரு காா் பரிசாக வழங்கப்படுகிறது.

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிகபட்சமாக 13 காளைகளை அடக்கிய கண்ணன் என்பவா் முதல் பரிசு பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இதற்கிடையே, அவா் அணிந்திருந்த வரிசை எண் 33 அச்சிட்ட பனியன் வேறொருவருக்கு வழங்கப்பட்டது என்றும், ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டாா். அதன்படி, வட்டாட்சியா்கள் பழனிக்குமாா், சிவக்குமாா் உள்ளிட்டோா் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பதிவு செய்யப்பட்ட முழுமையான விடியோ காட்சிகளை வாடிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்தனா். மேலும், மாடுபிடி வீரா்கள் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இந்த விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியது: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 33 ஆம் எண் அச்சிட்ட பனியனை அணிந்திருந்த கண்ணன் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசுக்குத் தோ்வாகியுள்ளாா். அவா் முதல் சுற்றிலிருந்து இறுதிவரை களத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. போட்டியின் நிறைவில் அறிவித்தபடி, 13 காளைகளையும் அவா் அடக்கியது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அவா் அணிந்திருந்த 33 ஆம் எண் அச்சிட்ட பனியன் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெயா் பதிவு செய்யாமல் இருந்த கண்ணன், ஹரிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட 33 ஆம் எண் அச்சிட்ட பனியனை அணிந்து போட்டியில் பங்கேற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கை மதுரை கோட்டாட்சியா் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை சமா்ப்பிக்கப்பட உள்ளது. வேறொருவருக்கு வழங்கப்பட்ட பனியை அணிந்து பங்கேற்றிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான காளைகளை அவரே அடக்கியுள்ளாா். இருப்பினும் முதல் பரிசு யாருக்கு என்பதை ஜல்லிக்கட்டு விழாக்குழு இறுதி செய்யும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com