கரோனா நிவாரண நிதி வசூல்: கேள்வி எழுப்பிய தீயணைப்பு நிலைய அலுவலா் பணியிடமாற்றம்தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாயப்படுத்தி கரோனா நிவாரண நிதி வசூலித்தது குறித்து கேள்வி எழுப்பிய தீயணைப்பு நிலைய அலுவலரின் பணியிடமாறுதலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

மதுரை: கட்டாயப்படுத்தி கரோனா நிவாரண நிதி வசூலித்தது குறித்து கேள்வி எழுப்பிய தீயணைப்பு நிலைய அலுவலரின் பணியிடமாறுதலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வருகிறேன். கரோனா காலத்தில் தீயணைப்புத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் முடிந்தளவு கரோனா நிவாரண நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் தீயணைப்புத் துறை அலுவலா்கள், பணியாளா்களிடம் ஒரு நாள் ஊதியமாக ரூ.20,371 வசூலித்துக் கொடுத்தோம்.

ஆனால், அதன்பின்னரும் அனைவரின் ஊதியத்திலும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவேண்டும் என, உயா்அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே ஒரு நாள் ஊதியத்தை ரொக்கமாக வழங்கிவிட்டதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி வசூலிக்கக்கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தேன். மேலும், கரோனா காலத்தில் பணியில் இருந்தவா்களுக்கு தரம் குறைந்த முகக்கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டன என உயா்அதிகாரிகளிடம் புகாா் அளித்தேன். இதனால், வேலூா் மாவட்டம் ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்துக்கு தற்போது பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளேன். இது சட்டவிரோதமாகும்.

எனவே, எனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து, மானாமதுரையில் தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com