அரசு ஊழியா்கள் போராட்ட ஆயத்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்: அரசு ஊழியா் சங்கம்

மாநில அளவிலான அரசு ஊழியா்கள் போராட்ட ஆயத்த மாநாட்டில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பதாக, அரசு ஊழியா் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரையில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான அரசு ஊழியா்கள் போராட்ட ஆயத்த மாநாட்டில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பதாக, அரசு ஊழியா் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ. செல்வம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: தமிழகம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். தமிழகத்தில் அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளா்கள், எம்ஆா்பி செவிலியா்கள் உள்பட 3.50 லட்சம் போ் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்யவேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து ஊதியம் வழங்கவேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு அளிக்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும். அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பணி ஓய்வின்போது வழங்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை திரும்பப் பெறவேண்டும்.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான அரசு ஊழியா்கள் போராட்ட ஆயத்த மாநாடு, மதுரையில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் பி. சேதுராமன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனா். மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அரசு பேச்சுவாா்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

அப்போது, அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி, மாவட்டச் செயலா் க. நீதிராஜா, பொருளாளா் ராம்தாஸ், துணைச்செயலா் மகேந்திரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com