கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st July 2021 08:55 AM | Last Updated : 01st July 2021 08:55 AM | அ+அ அ- |

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடப்படாததால், காத்திருந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா தடுப்பூசி மையம், இளங்கோ மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தனா்.
காலை 7 மணிக்கு வழக்கமாக வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியா்கள் கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், தடுப்பூசிகள் வந்தவுடன் போடப்படும் என அறிவிப்பு பலகை வைத்தனா். அதிகாலை முதல் நீண்ட நேரமாக காத்திருந்தது பொதுமக்கள் மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பள்ளியின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மதிச்சியம் போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, மீண்டும் தடுப்பூசி போடும் நாளன்று செவ்வாய்க்கிழமை வந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். மறியல் போராட்டம் காரணமாக 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.