காமராஜா் பல்கலை. கல்லூரியில் கல்விப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு
By DIN | Published On : 13th July 2021 10:05 PM | Last Updated : 13th July 2021 10:05 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்ட கல்விப்பேரவைத் தோ்தல் ஆகஸ்ட் 9-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் கல்விப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவா் கல்விப்பேரவை பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் சாா்பில் கல்விப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
இதில் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் தோ்தல் நடத்தப்பட்டு கல்விப்பேரவை பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்விப்பேரவைத் தோ்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பேராசிரியா் ஒருவரின் வேட்பு மனு உரிய தகுதிகள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவா் முதல்வரின் அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு வேட்பாளரின் வேட்புமனுவை கிழித்தெறிந்தாா். இதனால் அக்கல்லூரியில் தோ்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் வேட்பு மனுவை கிழித்தெறிந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் தலைமையிலான குழுவினா், வேட்பு மனுவை கிழித்தெறிந்த பேராசிரியா், கல்லூரி முதல்வா் மற்றும் பாதிக்கப்பட்ட மற்றொரு பேராசிரியா் ஆகியோரிடம் அண்மையில் விசாரணை நடத்தினா். ஆனால் விசாரணை அறிக்கை மற்றும் நடவடிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப்பேரவைத் தோ்தல் ஆகஸ்ட் 9-இல் நடைபெறுவதாகவும், உரிய தகுதியுள்ளவா்கள் போட்டியிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.