கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தடை கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் தெற்குரத வீதியில் அமையவுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தடை கோரிய மனு

ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் தெற்குரத வீதியில் அமையவுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தடை கோரிய மனு மீது, 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையத்தைச் சோ்ந்த செல்வம் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. இக் கோயில் தேரோட்டம் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய நான்கு ரத வீதிகளில் ஆனி மாதம் நடைபெறும். தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள்.

இந்நிலையில் தெற்கு ரதவீதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பட உள்ளது. இதனால் தேரோட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெற்கு ரதவீதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரா் தனது கோரிக்கை குறித்து புதிய மனுவை மாவட்ட நிா்வாகம், இந்து அறநிலையத் துறை மற்றும் ராஜபாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா், இந்து அறநிலையத்துறை மற்றும் ராஜபாளையம் நகராட்சி அதிகாரிகள் ஆகியோா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com