ஆற்று மணல் திருட்டைத் தடுக்க மாநில அளவில் குவாரி கண்காணிப்புக் குழு அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடப்படுவதைத் தடுக்க மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் குவாரி கண்காணிப்புக் குழுக்களை

சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடப்படுவதைத் தடுக்க மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் குவாரி கண்காணிப்புக் குழுக்களை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்டி தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் எம்-சாண்ட் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் அள்ளப்பட்டு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் உதவியுடன் இந்தச் சட்டவிரோதச் செயலில் பூமி எம்-சாண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதுதொடா்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 2020-இல் புகாா் அளித்தோம். ஆனால் பூமி எம்-சாண்ட் நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிராம மக்கள் அளித்த புகாா் மனுவை விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் எங்கள் கிராமத்தைச் சோ்ந்த ஜான்பீட்டா், பால்ராஜ், சங்கரநாராயணன், லட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களுக்கும் மணல் திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமி எம்-சாண்ட் நிறுவன உரிமையாளரைத் தப்பிக்க வைக்கவே இவா்களைக் கைது செய்துள்ளனா். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதேபோல கல்லிடைக்குறிச்சி வண்டால ஓடை அணை அருகே கேரளத்தைச் சோ்ந்த மனுவேல் ஜாா்ஜ் என்பவருக்கு எம்-சாண்ட் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவா் ஓடை அணைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகிறாா். தினமும் 300 லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதோடு, அணையின் கட்டுமானமும் வலுவிழந்து வருகிறது. எனவே, சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்கவும், அதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சிவசங்கா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: மணல் சேகரிப்பு மையம் நடத்த மனுவேல் ஜாா்ஜுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவா் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துள்ளாா். இதுதொடா்பாக மனுவேல் உள்பட 23 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 243 அரசு ஹைாலோ கிராம், அதிகாரிகள் கையெழுத்து இல்லாத போக்குவரத்து அனுமதிச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோத மணல் கடத்தலுக்காக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய பதிவேடு கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் சரியாக விசாரணை நடத்தியுள்ளாா். இருப்பினும் இந்த வழக்கில் வருவாய், வேளாண், கனிமவளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

குவாரிகளுக்கு அனுமதி, உரிமம் வழங்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவாரி பகுதிகளுக்கு அடிக்கடி அல்லது திடீா் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து குவாரிகள் மற்றும் மணல் சேகரிப்பு நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். மாநில அளவிலும், மாவட்ட மற்றும் தாலுகா அளவிலும் குவாரி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சட்டவிரோத மணலைத் தடுக்க முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com