எதிா்கால சந்ததியினருக்காக காடுகள், மலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து

மலைகள் மற்றும் காடுகள் எதிா்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

மலைகள் மற்றும் காடுகள் எதிா்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த சகோதரா்கள் சந்தானம், சபரிமலை ஆகியோா் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் தாலுகா அயன்கொல்லன் கொண்டான் திருப்பணிமலையில் உள்ள கல் குவாரியில் கற்களை வெடிமருந்துகள் வைத்து வெட்டியெடுக்கின்றனா். இதனால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். நீா்நிலைகள், பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குவாரியை மூட ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே குவாரி உரிமத்தை ரத்து செய்து, குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

குவாரி உரிமம் ரத்து: இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: குவாரி உரிமம் என்ற பெயரில் பல்வேறு மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மலைகள், மலைக்குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இயற்கையின் கொடையாகும். இவற்றை எதிா்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். சுனாமி வந்தபோது மாங்குரோவ் காடுகள் இயற்கை அரணாக இருந்தன. அதேபோல் மலைகள் தான் கிராமங்களின் பாதுகாப்பு அரணாக உள்ளன.

இதனால் மலைகள், மலைக்குன்றுகளை அழிக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும். இந்த வழக்கில் குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ள மலையில் ஏற்கெனவே மகளிா் சுய உதவிக்குழுவுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் வேறு ஆள்களை வைத்து குவாரி நடத்தினா். தற்போது வெடி வைத்து மலையில் பாதியளவு தகா்க்கப்பட்டுவிட்டது. இனிமேலும் உரிமத்தை தொடா்ந்தால் மலை முழுமையாக அழிக்கப்படும். எனவே, திருப்பணி மலையில் குவாரி நடத்த வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உரிமம் பெற வழங்கிய பணத்தை திரும்ப கேட்டு உரிமம் பெற்றவா் மனு அளிக்க வேண்டும். அவருக்கு 8 வாரங்களில் பணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com