தளா்வுகளுடன் பொதுமுடக்கம்: மதுரையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு

பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை நகரில் திங்கள்கிழமை வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கத் தொடங்கின.
மதுரை நெல்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை காணப்பட்ட போக்குவரத்து நெரிசல்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை காணப்பட்ட போக்குவரத்து நெரிசல்.

பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை நகரில் திங்கள்கிழமை வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கத் தொடங்கின.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் முழுமையான பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தனியாகச் செயல்படக் கூடிய மளிகை, காய்கறி கடைகள், மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹாா்டுவோ், இரு சக்கர வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடைகள் ஆகியன திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மதுரை நகரில் திங்கள்கிழமை காலையிலிருந்தே கடைகளுக்குச் செல்லும் பணியாளா்கள், பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலகங்களுக்குச் செல்வோா் என பல்வேறு தரப்பினரும் இரு சக்கர வாகனங்களில் சென்றுவந்த வண்ணம் இருந்தனா். கடைவீதிகள் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், காா்களின் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. நெல்பேட்டை, சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இருப்பினும், காய்கறி சந்தைகள், மீன் சந்தைகளுக்கு அனுமதியில்லை என்பதால், நெல்பேட்டை, தெற்குவாசல் பகுதிகளில் உள்ள மீன்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சந்தைகளில் இல்லாமல் தனியாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டன.

கீழமாசி வீதியில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது. வாடிக்கையாளா்களை சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறு கடைக்காரா்கள் அறிவுறுத்தினா். இருப்பினும், பல இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை இன்னும் தவிா்க்கவில்லை. அதேபோல், சரியாக முகக்கவசம் அணியாமலும் கடைவீதிகளுக்கு வந்து சென்றனா்.

பெரும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலானோா் அதுகுறித்து விழிப்புணா்வு இல்லாமல் இருப்பதையே இது காட்டுவதாக உள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி

தளா்வில்லா பொதுமுடக்கத்தின்போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தளா்வுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆா்டா் பெற்று செயல்படும் நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் டயா், டியூப், ஆயத்த ஆடைகள், அப்பளம், மசாலா பொருள்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் ஏற்றுமதி செய்யும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தளா்வுகள் வழங்கப்பட்டதையடுத்து, இந் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com