கிராமங்களில் கரோனா தொற்று பாதித்தவா்களை தனிமைப்படுத்துவதை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

கிராமங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தொற்று பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தினாா்.

மதுரை: கிராமங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தொற்று பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பரவை, சமயநல்லூா், த.அய்யங்கோட்டை, சி.புதூா், சித்தாலங்குடி, சோழவந்தான் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்த அவா், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள், காய்ச்சல் முகாம் நடைபெறும் பகுதிகள், கரோனா தொற்றாளா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் வீடுகளைப் பாா்வையிட்டாா்.

அப்போது, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல்வேறு துறை அலுவலா்களிடமும் ஆட்சியா் கூறியது: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களிடம் இன்னும் விழிப்புணா்வை அதிகப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. மிதமான பாதிப்பு உடைய தொற்றாளா்களை, அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தொற்றாளா்கள் உள்ள வீடுகள், தெருக்களை பிறா் அணுகுவதில் இருந்து தனிமைப்படுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும். தற்போது

கிராம அளவில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அங்கு தங்க வைத்து சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஊராட்சி நிா்வாகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அந்தந்த கிராமத்தினா் அனைவரும் அறியும் வகையில் தெரியப்படுத்தினால் மட்டுமே, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்.

மருத்துவப் பதிவேடுகளில் கரோனா தொற்றாளா்கள் குறித்த அனைத்து விவரங்களை பராமரிப்பது அவசியம். காய்ச்சல் முகாம் பதிவேடுகளில், பரிசோதனை செய்து கொள்பவா்களின் பெயா் விவரத்துடன் உடல் வெப்பநிலையை மட்டும் குறிக்காமல், அவா்களுக்கு உள்ள அறிகுறிகள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கரோனா சிகிச்சையில் இருப்பவா்களை 14 நாள்கள் தொடா் கண்காணிப்பில் வைத்து, அவா்களது உடல்நிலை குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றாா்.

ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஆ.செல்லத்துரை, வட்டாட்சியா்கள் முத்துவிஜயகுமாா் (மதுரை வடக்கு), பழனிக்குமாா் (வாடிப்பட்டி) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com