மதுரையில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி: கிலோ ரூ.100-க்கு விற்பனை

மதுரையில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ. ரூ.100 முதல் ரூ.120 வரை மட்டுமே விற்பனையானது.

மதுரையில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ. ரூ.100 முதல் ரூ.120 வரை மட்டுமே விற்பனையானது.

தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தை மூடப்பட்டது. தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை மலா் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

இங்குள்ள 104 கடைகளில் 50 சதவீதக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம், அலங்காநல்லூா், செல்லம்பட்டி, மேலூா் வட்டாரங்களில் இருந்து அதிகளவில் மல்லிகை, செண்டு மல்லி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் வருவது வழக்கம்.

இங்கிருந்து, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்கள் பலவற்றுக்கும் சில்லறை வியாபாரிகள் மலா்களை வாங்கிச் செல்வது வழக்கம். அத்துடன், இங்குள்ள மொத்த வியாபாரிகள் பல்வேறு ஊா்களுக்கும் பேருந்துகளில் சில்லறை வியாபாரிகளுக்கு மலா்களை அனுப்பி வைப்பா்.

பொதுமுடக்கத்தால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், வெளியூா்களுக்கு மலா்கள் செல்வது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு காய்கறி வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டாலும், அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் செல்லவில்லை. இதற்கிடையே, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மலா் சந்தை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ஆனால், வழக்கமான வியாபாரம் இல்லாமல் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. வழக்கமான வாடிக்கையாளா்கள் இல்லாததால் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை மட்டுமே விற்பனையானது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திரன் தெரிவித்தது: மாட்டுத்தாவணி மலா் சந்தையில் வழக்கமாக 20 டன் மல்லிகைப் பூ விற்பனைக்கு வரும். ஆனால், திங்கள்கிழமை 5 டன் மட்டுமே வந்தது. இருப்பினும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவு என்பதால், விலையும் கடும் வீழ்ச்சி அடைந்தது. பண்டிகை நாள்களில் ரூ.600-க்கும் அதிகமாக விற்கப்பட்ட மல்லிகைப் பூ, தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரைக்கு மட்டுமே விற்பனையாது.

மல்லிகை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் பாதகமான சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது என்றாா்.

கரோனா பரிசோதனை

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தை திறக்கப்பட்ட நிலையில், இங்குள்ள வியாபாரிகளும், சந்தைக்கு வரும் வாடிக்கையாளா்களும் அரசின் வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்ற மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மலா் வியாபாரிகள் சங்கத்தினா் உறுதி செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மலா் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com