வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவா்களுக்கு கால அவகாசம் அறிவிப்பு
By DIN | Published On : 11th June 2021 08:14 AM | Last Updated : 11th June 2021 08:14 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறுபவா்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை பதிவைப் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதிவை புதுப்பிக்க விரும்பும் பதிவுதாரா்கள் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள், இணையம் வாயிலாக தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் மூலம் புதுப்பிக்கும் பதிவு தாரா்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி ஆகஸ்ட் 27-க்குள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.