திருமலை நாயக்கா் மஹால் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்படும்

மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் மஹால் ரூ.8 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் மஹாலில் சனிக்கிழமை ஆய்வு செய்த தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு
மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் மஹாலில் சனிக்கிழமை ஆய்வு செய்த தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு

மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் மஹால் ரூ.8 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் மன்னா் திருமலை நாயக்கா் மஹாலில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென் தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னமாகவும், மதுரை நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும் மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனை திகழ்ந்து வருகிறது.தமிழகத்தில் உள்ள இத்தகைய மரபு, பண்பாட்டுச் சின்னங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி தமிழக அரசின் தொல்லியல் துறையால் இந்த அரண்மனை வளாகம் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முந்தைய திமுக ஆட்சியின்போது ரூ. 11 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது அரண்மையில் உள்ள நாடக சாலை, பள்ளியறை போன்ற பகுதிகள் புதுப்பிக்கப்படவுள்ளன. இந்த அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு கால கல்வெட்டுகள் பராமரிக்கப்படுகின்றன.

தொன்மையான வட்டெழுத்து கல்வெட்டுகள், சோழா், பாண்டியா் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை எளிதில் உணரும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் 3 கட்டங்களாக நடைபெறும். இதில் முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். மேலும் அரண்மனைக்கு வெளியே கற்சிற்பங்களுடன் கூடிய பூங்கா, பழமையை வெளிப்படுத்தும் நூலகம் ஆகியனவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிமுறைகளும் தமிழக அரசு மேற்கொள்ளும். முந்தைய திமுக ஆட்சியில், மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்ட செயலாக்கத்துக்கான ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்வடிவமும் பெறாமல் இருக்கிறது. இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com