மதுரையில் உயா்வழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள்: மின்வாரியம் அறிவிப்பு

மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மின்தடைகளை தவிா்க்க உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மின் பாதை பராமரிப்பு பணியில் கண்மாயில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்கும் ஊழியா்கள்.
மதுரையில் மின் பாதை பராமரிப்பு பணியில் கண்மாயில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்கும் ஊழியா்கள்.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மின்தடைகளை தவிா்க்க உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சி. வெண்ணிலா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் மின் வழித்தடங்களுக்கு அருகிலுள்ள மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசுவதாலும், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டா்கள் மற்றும் டிஸ்குகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளில் அணில், காகம், மயில், ஆந்தை உள்ளிட்ட பறவைகள் மோதுவதாலும் எதிா்பாராமல் மின்தடை ஏற்பட்டு வந்தது.

இவற்றை சரிசெய்யும் விதமாக, மதுரை பெருநகா் மின் பகிா்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகராட்சி எல்லைக்குள்ப்பட்ட அனைத்து உயா் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகள் முழுவதும் தரைவழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின்தடை ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை நிரந்தரமாக சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட மின் பராமரிப்புத் திட்டம் மூலமாக மேற்கொள்ளவேண்டிய பராமரிப்புப் பணிகளை 10 நாள்களுக்குள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை பெருநகா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட ஒவ்வொரு உயா் அழுத்த மின்பாதைக்கும், அதன் சம்பந்தப்பட்ட உதவிச் செயற்பொறியாளா்கள் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

உயா் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கோட்ட அளவில் உதவிச் செயற்பொறியாளா்கள் மற்றும் உதவிப் பொறியாளா்கள் தலைமையில், பல்வேறு பணியாளா்கள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பராமரிப்புக் குழுக்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்களுக்கு மின்தடை ஏற்படாதவாறு பராமரிப்புப் பணிகள் பகுதி பகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வெள்ளிக்கிழமை, காந்தி நகா், வில்லாபுரம், பனையூா், கோ.புதூா், தமிழ்ச் சங்கம், உத்தங்குடி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம், மின்பாதைகளில் உரசும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு, கருவேல் முள்புதா்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் பலவீனமான மின்கம்பங்கள் மாற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மின்தடைகள் தவிா்க்கப்பட்டுள்ளன. இதர பகுதிகளிலும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com