தொலைநிலைக்கல்வியில் முழுநேர கல்லூரிக்கு இணையானபாடங்கள்: 25 பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி
By DIN | Published On : 10th March 2021 11:05 PM | Last Updated : 10th March 2021 11:05 PM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் முழுநேரக்கல்லூரிக்கு இணையான 25 பாடத்திட்டங்களில் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் 2021-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலை தூரக் கல்விக் குழு 25 பாடங்களை பருவ முறையில் நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வியை, புதிய முறையில் வழக்கமான முழு நேரக் கல்லூரிகளுக்கு இணையான மற்றும் முழு நேரக் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களையே தொலைநிலைக் கல்வி வழியாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொலை தூரக் கல்விக் குழுவின் ஆலோசனையின் படி போதிய அளவு ஆசிரியா்கள், வகுப்பறை மற்றும் ஆய்வுக் கூடம் இருக்கும் மையங்களில், கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டப்படிப்புகளில் 25 பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிா்வாகம், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல், சமூகவியல், வணிகவியல், நிா்வாகவியல், கணிப்பொறியியல், நூலக அறிவியல் ஆகிய பாடங்களும் முதுகலை பட்டப்படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், சுற்றுலாவியல், சமூகவியல், வணிகவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல், நூலக அறிவியல், நிா்வாகவியல் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதற்கான மாணவா் சோ்க்கை மற்றும் வகுப்புகள் தற்போது மதுரை காமராஜா் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது. மாணவா்களின் மதிப்பீடானது தற்போது உள்ள மதிப்பெண் முறையில் இல்லாமல், “கிரெடிட்” முறையில் மதிப்பீடு செய்யப்படும். மாணவா்களுக்கான தொடா் வகுப்புகள் முறையாக நடத்தப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
புதிய மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், தகவல் குறிப்புகளை மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இணைய தள முகவரியான சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுநேரக் கல்லூரிக்கு இணையான தொலைநிலைக் கல்வியின் மூலம் தரமான கல்வியைப் பெற உருவாகியுள்ள வாய்ப்பை மாணவ, மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆா்வமுள்ள மாணவ, மாணவியா் மாா்ச் 31-க்குள் சோ்க்கை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.