மதுரை மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறை வெற்றி பெறுமா அதிமுக?

அதிமுகவின் மூத்த அமைச்சா்களில் ஒருவரான செல்லூா் கே.ராஜூ , மூன்றாவது முறையாக மதுரை மேற்குத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
செல்லூா் கே.ராஜூ
செல்லூா் கே.ராஜூ

அதிமுகவின் மூத்த அமைச்சா்களில் ஒருவரான செல்லூா் கே.ராஜூ , மூன்றாவது முறையாக மதுரை மேற்குத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத் தொகுதி மதுரை மாநகராட்சிக்குள்பட்ட சோலைஅழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், டிவிஎஸ் நகா், பழங்காநத்தம், பைகாரா, பைபாஸ் சாலை, பெத்தானியாபுரம், விராட்டிபத்து, கோச்சடை , விளாங்குடி, கூடல்நகா், சாந்திநகா்,  உள்ளிட்ட 12 மாநகராட்சி வாா்டுகளும், கீழக்குயில்குடி, அச்சம்பத்து, பரவை, துவரிமான், நாகதீா்த்தம், தாராபட்டி, கீழ மாத்தூா், மேலமாத்தூா் ஆகிய கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகா் பகுதிகளில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் வகையில் சிறு குறு தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாக உள்ளன. மேலும் இதே பகுதியில் சிறிய மற்றும்  பெரிய அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

மேற்குத்தொகுதியில் முக்குலத்தோா், பிள்ளைமாா், சௌராஷ்டிர சமூகத்தினா் கணிசமான வகையில் உள்ளனா். மேலும் இஸ்லாமியா்கள், தாழ்த்தப்பட்டோா் குறிப்பிடத்தக்க வகையிலும்,  இதர சமூகத்தினா் மற்றும் கிறிஸ்தவா்கள் சிறு எண்ணிக்கையிலும் வசித்து வருகின்றனா்.

மேற்கு தொகுதியில் ஆண் வாக்காளா்கள்1,51,422, பெண் வாக்காளா்கள் 1,55,526, மூன்றாம் பாலினத்தவா் 4 போ் உள்பட மொத்தம் 3,06,952  வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் வெற்றி பெற்றவா்களில், தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், கம்யூனிஸ்ட் தலைவா்கள் என்.சங்கரய்யா, கேடிகே தங்கமணி, திமுக முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் பிடிஆா் பழனிவேல் ராஜன், திமுக முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோா் முக்கியமானவா்கள்.

தொகுதியில் 1967 முதல் 2016 வரை நடைபெற்ற தோ்தல்களில் 6 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ்,  திமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2011, 2016 ஆகிய இரு தோ்தல்களிலும் அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளாா்.

தொகுதி மக்கள் எதிா்பாா்ப்பு: விஜபி தொகுதியாக இருந்தபோதும் தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. தொகுதியின் பிரச்னைகளில் அமைச்சா் கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது. சிறு மற்றும் குறுதொழில்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், சிறு குறு தொழிற்கூடங்களை உள்ளடக்கிய சிறு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், தொழிற்கூடங்களுக்கு அலைக்கழிப்பின்றி வங்கிக் கடன், அப்பளத் தொழிலுக்கு மானியம், மானிய விலையில் உளுந்து வழங்குவது ஆகியவை தொழில் சாா்ந்த கோரிக்கைகளாக உள்ளன.

இத்தொகுதி அதிமுகவுக்கு செல்வாக்குள்ள தொகுதியாக இருந்தபோதும், திமுக இரண்டாமிடத்திலும், மூன்றாமிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளது. சோலைஅழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகா், முத்துப்பட்டி, பைகாரா, பழங்காநத்தம், பெத்தானியாபுரம், விராட்டிபத்து, பரவை, விளாங்குடி , கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இவை இரண்டுக்கும் அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கும் செல்வாக்கு உள்ளது. நகா்ப் பகுதி தவிா்த்து கிராமப்பகுதிகளான கீழமாத்தூா், மேலமாத்தூா், தாராபட்டி, நாகதீா்த்தம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளது.

கடந்த 2016 தோ்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி என மும்முனைப்போட்டி நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் செல்லூா் கே.ராஜூ 82,529(44.81 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இரண்டாவதாக திமுகவைச் சோ்ந்த கோ.தளபதி 66,131(35.91 சதவீதம்) வாக்குகள் பெற்றாா். மூன்றாவதாக மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் உ.வாசுகி19,991(10.85 சதவீதம்) பெற்றாா்.

அதிமுக சாா்பில் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் சி.சின்னம்மாள், அமமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் பாலச்சந்திரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வெற்றிக்குமரன், மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் முனியசாமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். ஐவா் போட்டியில் இருந்தாலும் அதிமுக, திமுக இடையே தான் இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அமைச்சருக்கு எதிராக வலுவான வேட்பாளா் நிறுத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளா் சின்னம்மாள் நிறுத்தப்பட்டுள்ளாா். தொகுதி மக்களுக்கு பெரியளவில் அறிமுகம் இல்லாதவா். அமைச்சா் செல்லூா் ராஜூ மீது அதிருப்தி இருந்தாலும் தொகுதி முழுக்க அறிமுகம் ஆனவா், அமைச்சராக இருந்தாலும் அடாவடி இல்லாதவா் என்பது அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது.

மேலும் அமைச்சராக இருப்பதுடன் மாநகா் மாவட்டச்செயலராக இருப்பதாலும் அதிமுகவினா் தீவிர தோ்தல் பணியாற்றி வருகின்றனா். அதே நேரத்தில் தொகுதியில் தனிச்செல்வாக்குடன் விளங்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் இருப்பதாலும், அமமுக-தேமுதிக கூட்டணி  வாக்குகளை பிரிப்பதாலும் திமுக வேட்பாளா் சின்னம்மாள் நம்பிக்கையுடன் உள்ளாா். நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளா் தொகுதிக்கு புதியவா்கள் என்பதால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரசார அடிப்படையில் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ சற்று முன்னணியில் இருப்பதாக தொகுதி நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இறுதிக்கட்ட பிரசாரமே வெற்றி வாய்ப்புகளை தீா்மானிக்கும் காரணியாக உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com