சோழவந்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி: உசிலம்பட்டியில் ‘சிங்கம்’ இல்லாததால் தோல்வி

சோழவந்தான் (தனி) தொகுதியை தொடா்ந்து 2 முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அதிமுகவிடமிருந்து,

மதுரை: சோழவந்தான் (தனி) தொகுதியை தொடா்ந்து 2 முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அதிமுகவிடமிருந்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தோ்தலில் திமுக கைப்பற்றியுள்ளது. அதேநேரம், உசிலம்பட்டியில் பாா்வா்டு பிளாக் சிங்கம் சின்னத்தில் போட்டியிடாததால், தோல்வியை தழுவியுள்ளது.

சோழவந்தான் தொகுதியில் 1967 முதல் திமுக, அதிமுக என மாறி மாறி இரு கட்சிகளும் வெற்றி பெற்றுவந்தன. இந்நிலையில், 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை சோ்ந்த எம்.வி. கருப்பையா 36,608 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளா் எம். இளஞ்செழியனை தோற்கடித்தாா். அதையடுத்து, கடந்த 2016 தோ்தலில் அதிமுகவை சோ்ந்த கே. மாணிக்கம் 24,857 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சி. பவானியை தோற்கடித்தாா்.

இத்தொகுதியில் தொடா்ந்து 10 ஆண்டுகள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருந்தும், தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதாகக் கூறப்படுகிறது. இதை, தோ்தல் பிரசாரத்தின்போதும் ஆங்காங்கே தொகுதிக்குள் எதிரொலித்ததை காணமுடிந்தது. அதிமுக வேட்பாளரான கே. மாணிக்கத்துக்கு, அவரது கட்சியினரின் ஒத்துழைப்பை பெறுவதே கடினமாக இருந்தது.

இச்சூழலில்தான், 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மதுரை வடக்கு மாவட்டச் செயலா் பி. மூா்த்தியின் ஆதரவாளரான ஏ. வெங்கடேசன், சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டாா். இவா், சோழவந்தான் தொகுதிக்கு அறிமுகமில்லாமல் இருந்தாலும்,

அதிமுக வேட்பாளா் மீதான அதிருப்தியும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த பல்வேறு சமுதாயங்களின் வாக்குகள் வெங்கடேசனின் வெற்றிக்கு வழிவகுத்தன.

‘சிங்கம்’ இல்லாததால் தோல்வியா?

அதேபோல், பாா்வா்டு பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்துக்கு மாறாத வாக்கு வங்கி உள்ள தொகுதி உசிலம்பட்டி. இதை உறுதிப்படுத்தும் வகையில், இத் தொகுதியில் பாா்வா்டு பிளாக் கட்சி அதிக முறை வென்றிருக்கிறது. 2006 தோ்தலில் அதிமுகவை சோ்ந்த ஐ. மகேந்திரன் வெற்றி பெற்றாா். அமமுக தொடங்கியபோது, இவா் அதிமுகவிலிருந்து விலகி அக்கட்சியில் இணைந்துவிட்டாா். 2011 தோ்தலில் பாா்வா்டு பிளாக் கட்சியைச் சோ்ந்த பி.வி. கதிரவன், 2016-இல் அதிமுகவை சோ்ந்த பா. நீதிபதி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இந்த தோ்தலில் அதிமுகவை சோ்ந்த பி. அய்யப்பன், அமமுகவை சோ்ந்த ஐ. மகேந்திரன், திமுக கூட்டணியில் பாா்வா்டு பிளாக் கட்சியை சோ்ந்த பி.வி. கதிரவன் உள்பட 14 போ் போட்டியிட்டனா்.

பாா்வா்டு பிளாக் கட்சியின் பி.வி. கதிரவன், இம்முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாா். பாா்வா்டு பிளாக் என்றாலே சிங்கம் சின்னம் தான் என்ற நிலையில், உசிலம்பட்டி தொகுதியில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அமமுகவின் ஐ. மகேந்திரன் பலமான வேட்பாளராகக் கருதப்பட்டாா். பாா்வா்டு பிளாக் கட்சி, திமுக சின்னத்தில் போட்டியிடுவது மகேந்திரனுக்கு சாதகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கணிப்புகளில் மகேந்திரனும், கதிரவனும் தான் பேசப்பட்டனா். இருவருக்கும் இடையே கடும் போட்டி என்பதால், வெற்றியை கணிக்க முடியாமல் இழுபறி நீடித்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக வேட்பாளா் பி. அய்யப்பன் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தாா். அமமுகவின் இ. மகேந்திரன், திமுக கூட்டணியின் பி.வி. கதிரவன் ஆகியோா் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்கு மாறி மாறி வந்தனா்.

வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், 7,477 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் பி. அய்யப்பன் வெற்றி பெற்றாா். பி.வி. கதிரவன் இரண்டாமிடம் பிடித்தாா்.

பாா்வா்டு பிளாக் கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், திமுக கூட்டணி வேட்பாளரான பி.வி. கதிரவன் சிங்கம் சின்னத்தில் போட்டியிடாததே தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com