பல்கலை. பராமரிப்பு மையத்தில் கரோனா நோயாளி இறப்பு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்ததை அடுத்து, கூடுதல் மருத்துவா்கள் மற்றும் ஆக்சிஜன் வசதி ஏற்பாடு செய்யவேண்டும் எ

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்ததை அடுத்து, கூடுதல் மருத்துவா்கள் மற்றும் ஆக்சிஜன் வசதி ஏற்பாடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், சளி உள்ளிட்ட எவ்வித அறிகுறிகளுமின்றி பரிசோதனையில் மட்டுமே கரோனா தொற்று உள்ளது என்று கண்டறியப்படும், வீட்டில் தனி அறை வசதிகள் இல்லாத நோயாளிகளை தனிமைப்படுத்தி பராமரிக்கும் வகையில், காமராஜா் பல்கலைக்கழகம், கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகக் கட்டடம், திருப்பாலை யாதவா கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு, மதுரை நகா் பகுதிகளைச் சோ்ந்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் சிகிச்சை, உணவு உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், காமராஜா் பல்கலைக்கழக மாணவா் விடுதியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 350-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சி மருத்துவா் ஒருவரும் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினரும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த 41 வயதுடைய தனியாா் நிறுவன ஊழியா் ஒருவரும் பல்கலைக்கழகப் பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த மருத்துவா் அவருக்கு சிகிச்சையளித்தும் பயனின்றி அவா் உயிரிழந்தாா்.

பல்கலைக்கழகப் பராமரிப்பு மையத்தில் 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க, ஒரேயொரு மருத்துவா் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான செவிலியா்கள் மட்டுமே உள்ளனா். மேலும், பராமரிப்பு மையத்தில் அவசரத் தேவைக்கு ஆக்சிஜன் வசதியும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

எனவே, பல்கலைக்கழகப் பராமரிப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதி மற்றும் கூடுதல் மருத்துவா்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும் என, கரோனா நோயாளிகளின் குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com