கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகாா் அளிப்பது? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வெரோனிகா மேரி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் வேகமாக அதிகிரித்து வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை காலியாக வைத்திருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி 50 சதவீத படுக்கைகளையும் காலியாக வைப்பதில்லை. இதுதொடா்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதி காலி இடங்கள் மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கரோனா பேரிடா் காலத்தில் அா்ப்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், அனைத்து சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் பிற முன்களப் பணியாளா்களையும் நீதிமன்றம் பாராட்டுகிறது. கரோனா பேரிடா் காலத்தில் நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் தொடா்பான அரசாணை அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?. கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பாதிக்கப்படுபவா்கள் யாரிடம் புகாா் செய்ய வேண்டும்? தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எந்தப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு என்ன தண்டனை வழங்கப்படும். தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் விவரம் குறித்த அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிா, இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டியது யாா்? இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எத்தனை தனியாா் மருத்துவமனைகள் மீது புகாா்கள் வந்துள்ளன? அந்தப்புகாா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உத்தரபிரதேசம், புதுதில்லி போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தனியாா் மருத்துவமனைகளின் படுக்கை வசதி, சிகிச்சைக் கட்டணம் ஆகியவற்றுக்காக அரசே ஏன் தனியாக இணையதளத்தை தொடங்கக்கூடாது? தமிழக முதலமைச்சா் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எத்தனை போ் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனா் ஆகிய கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மே 12-இல் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com