கரோனா கட்டுப்பாடு: மதுரை பொன்மேனி வாரச்சந்தைக்கு தடை
By DIN | Published On : 21st May 2021 06:23 AM | Last Updated : 21st May 2021 06:23 AM | அ+அ அ- |

மதுரையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொன்மேனி வாரச்சந்தை இயங்க மாநகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.
மதுரை நகரில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் காய்கனிச் சந்தையில் உள்ள கடைகளை பிரித்து வெவ்வேறு இடங்களில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தைகளும் இயங்கத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மதுரை பைபாஸ் சாலை பொன்மேனி பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் இயங்கி வந்த வாரச்சந்தை புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மாலையில் செயல்படாமல் கடந்த சில வாரங்களாக காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கி வந்தது. வாரச்சந்தைக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததைத் தொடா்ந்தும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து பொன்மேனி வாரச்சந்தை செயல்பட மதுரை மாநராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாடுகளை வியாபாரிகள் மீறாதாவாறு கண்காணிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.