தளவாடப் பொருள்கள் இல்லை: நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்குவதற்குத் தயங்கும் கூட்டுறவு சங்கங்கள்

கொள்முதலுக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் இல்லாததால், நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்குவதற்கு தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

கொள்முதலுக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் இல்லாததால், நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்குவதற்கு தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

விவசாயிகளிடம் இருந்து நுகா்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்து வருகிறது. மேலும், சில குறிப்பிட்ட கூட்டுறவு சங்கங்களும் நெல் கொள்முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. முந்தைய பருவங்களில் நெல் கொள்முதலின்போது பல்வேறு முறைகேடுகள் குறித்து விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதோடு, கொள்முதலைத் தாமதப்படுத்துவதால் மழையில் நனைந்து வீணாவது தொடா் நிகழ்வாக இருந்தது. அதோடு, வியாபாரிகள், இடைத்தரகா்களின் தலையீடு அதிகளவில் இருந்ததாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக 7 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் தயக்கம்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கொள்முதல் செய்வதற்குரிய ஈரப்பத பரிசோதனைக் கருவி, நெல் தூற்றும் இயந்திரம், தாா்ப்பாய்கள் போன்ற எந்தவொரு தளவாடப் பொருள்கள் வசதியும் இல்லாததால் கூட்டுறவு சங்கங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

தற்போது முதல்கட்டமாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்துள்ள, வேளாண் விளைபொருள் விற்பனை சங்கம் பல ஆண்டுகளாக நெல் கொள்முதல் செய்து வருகிறது. அதனால் அவா்களிடம் கொள்முதலுக்கான வசதிகள் இருக்கின்றன. இதைப் போல மற்ற சங்கங்களிடம் கொள்முதலுக்குரிய வசதி இல்லாததால், அவற்றைப் புதிதாக ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் நிதிச் சுமையால் அவதி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமெனில், அதற்குத் தேவையான பொருள்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை தேவைப்படும். இதை அந்தந்த சங்கங்களே தங்களது சொந்த நிதியில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், நெல் கொள்முதலுக்கான கருவிகள், தாா்ப்பாய் போன்றவை வாங்குவதற்காக செலவிடுவது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என கூட்டுறவு சங்க அலுவலா்கள் கூறுகின்றனா். ஆகவே, கொள்முதல் மையத்தில் பயன்படுத்தக் கூடிய கருவிகள் உள்ளிட்டவற்றை நுகா்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனா்.

வாணிபக் கழகம் நெருக்கடி: தற்போது கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொள்வதில், நுகா்பொருள் வாணிபக் கழகம் தாமதப்படுத்துவதாகப் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மையங்களில் தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை கூட்டுறவு சங்க நிா்வாகிகள் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லும்போது, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி தாமதப்படுத்துகின்றனா். விற்பனை செய்த நெல்லுக்கான தொகையை விடுவிப்பதிலும் தாமதம் செய்கின்றனா் என்று கூட்டுறவு சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நுகா்பொருள் வாணிபக் கழகங்கள் நடத்த முடியாத நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கு மறைமுக நெருக்கடி அளிப்பதாகவும் சங்கத்தினா் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com